சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள்களை விற்பனை செய்தவரின் கைபேசியில் பதிவாகி இருந்த ஆபாச காணொளிகள் மூலம் அவர் ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பெட்டிக்கடை நடத்தி வரும் 48 வயதான பெருமாள் (படம்) என்ற ஆடவர் குட்கா பொருள்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் அவரது கடையில் இருந்து 30 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின்போது, அவரது கைபேசியை ஆய்வு செய்தபோது அதில் பல சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆபாசக் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதிர்ச்சி அடைந்த போலிசார், காணொளியில் காணப்பட்ட சிறுமிகளை அழைத்து விசாரித்த போது பெருமாளின் மோசமான செயல் அம்பலமானது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியின் தாய்க்குத் தெரிந்தே இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் பெருமாள்.
பின்னர் சிறுமியின் தாயாரையும் தன் இச்சைக்குப் பயன்படுத்தி உள்ளார். இதுவரை அவர் ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி உள்ளது. விசாரணை நீடித்து வருகிறது.
"ஒரு சிறுமியின் நான்கு வயது தோழியைக்கூட பெருமாள் விட்டுவைக்கவில்லை. அந்தக் குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
"எனவே, விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளோம்," என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

