செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dcd7129b-ce40-4116-95cc-d55c7593029c
-

பேருந்து-லாரி மோதல்: ஆறு பேர் பலி

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்து - கார் மோதிய கோர விபத்தில் ஆறு பேர் பலியான சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த 28 வயதான இமான், அவரது தாயார், மகன் உட்பட ஆறு பேர் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு சுமார் எட்டு மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து ஒன்று கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதியானது, பேருந்தின் கீழ்ப் பகுதியில் சிக்கிக்கொண்டது. மேலும் பேருந்து அந்த காரை சிறிது தூரம் இழுத்துச் சென்றதில், சாலையோரம் இருந்த 15 அடி ஆழ பள்ளத்தில் அந்த கார் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஆறு பேரும் இறந்துவிட்டனர்.

நித்யானந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மதுரை ஆதீனம்

மதுரை: சர்ச்சைக்குரிய நித்யானந்தா மதுரை ஆதீனத்துக்கு வந்தால் அவர் போலிசாரால் கைது செய்யப்படுவார் என அதன் 293ஆவது ஆதீனமான அரிகர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் எச்சரித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நித்யானந்தா குறித்து தாம் பேச விரும்பவில்லை என்றும் அவரது விவகாரத்தைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம் என்றும் கூறினார்.

இரு கார்களில் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்

சிவகங்கை: இரு கார்களில் கொண்டு வரப்்பட்ட 5 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை காரைக்குடி போலிசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த வாகனங்களை காரைக்குடி என்ஜிஓ காலனி அருகே போலிசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவ்வழியே வந்த இரு கார்களை நிறுத்தி சோதனை யிட்டபோது, அதில் சுமார் ஐந்து கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்பது தெரிய வந்தது. அதற்குரிய ஆவணங்களைக் கேட்டபோது காரில் வந்த ஆறுபேரும் உரிய விளக்கங்களை அளிக்கவில்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாஜக: குறுக்கே நிற்கும் முதல்வர்

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கட்சி என்ற ஒரே காரணத்துக்காக திமுக எதிர்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் தமிழக விவசாயிகள் வாழ்க்கை வளம் பெறுவதற்கு குறுக்கே தமிழக முதல்வரே நிற்பது தமக்கு வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.