விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா - வாலாஜா சாலையில் அமர்ந்த பேரவை உறுப்பினர்கள் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கைதாகினர்.
இதேபோல், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளு வர் சிலை அருகே திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சி.வி.சண்முகம் கைதைக் கண்டித்து விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் அதிமுகவினர் திரளாக அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

