சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால் மட்டும் கொரோனா வரும், பரவும் என்று சொன்னால் அதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்.
இந்து முன்னணியைச் சேர்ந்த மாநில துணைத் தலைவர் கார்த்தி கேயன், மாநில அமைப்பாளர் பக்த வத்சலன் ஆகியோர் செவ்வாய்க் கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
"டாஸ்மாக் திறந்திருக்கலாம், மால், சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் போகலாம், பேருந்து எல்லாம் ஓடலாம், எல்லா இடங்களுக்கும் மக்கள் போகலாம், வரலாம்.
"ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால் மட்டும் கொரோனா வரும், பரவும் என்று சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள்," என்று ஆவேசத்துடன் அவர்கள் கூறினர்.
தமிழக அரசு மதச்சார்பற்ற அரசாக இருப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் களுக்கும் இந்துக்கள் சென்று சாமியிடம் முறையிடுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.
கொள்ளைநோய் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பில் பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, பொது இடங்களில் விழாவைக் கொண்டாடுவது ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதோடு, அமைப்பாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனி நபர்களாக தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை தனிநபராக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.
"எங்களைப் பொறுத்தவரைஎந்த அரசாங்கம், யார் முதல்வர் என்று பார்ப்பதில்லை. இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே யார் வந்து நின்றாலும் எதிர்ப்போம். எங்களுக்கு எல்லாமே விநாயகர்தான். கடந்த ஆண்டு பொது இடங்களுக்கு பதிலாக தனியார் இடங்களில் வைத்து பூஜை செய்தோம்.
"இந்த ஆண்டும் சென்னையில் ஆயிரம் இடங்களிலும் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து கொரோனா நடத்தை விதிகளுக்கு உட்பட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்," என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறியுள்ளனர்.