சென்னை: தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 93 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 82 விழுக்காட்டினர் அரசு சேவையை அணுகுவதில் பெரும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறியுள்ளனர். அறப்போர் இயக்கம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
அரசு சேவைகளைப் பெறுவதில் நிலவும் பல்வேறு சிரமங்களையும் அதில் நடந்தேறும் முறைகேடுகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
தங்களுக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மாநிலம் முழுவதும் வருவாய், பதிவுத்துறையில்தான் அதிக ஊழல் நடப்பதாக அந்த இயக்கம் கூறுகிறது.
அரசு சேவைகளைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக எந்தவித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாத தனி அமைப்பு ஒன்று விசாரணை நடத்த வேண்டும் என்று 84 விழுக்காட்டினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களின் பட்டியலைத் தயாரிக்க உதவும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.