சென்னை: கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்றே சென்னையில் இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஓடும் ரயிலில் மோதிக்கொண்டனர். இதனால் ரயில் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
பல மாதங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் முதற்கட்டமாக 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் உள்ள 85 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல்நாளே சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் 'பேருந்து தினம்' கொண்டாட இருந்ததாக ஒரு தகவல் பரவியது. பல கல்லூரிகளில் ஆண்டுதோறும் பேருந்து தினம் கொண்டாடப்படுகிறது.
எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இத்தகைய கொண்டாட்டங்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அனுமதியின்றி பேருந்து தினத்தைக் கொண்டாட மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, சென்னையில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களைப் போலிசார் தீவிரமாகக் கண்காணித்தனர்.
இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் கடந்த காலங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வியாசர்பாடி பகுதியில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இரு கல்லூரிகளைச் சேர்ந்த தலா பத்து மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
அனைவரும் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயணிகளில் சிலருக்கு தவறுதலாக அடி விழுந்தது. பலர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
எனினும் மோதல் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலிசார் விரைந்து வந்து மாணவர்கள் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
மோதிக்கொண்ட மாணவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

