செய்திக்கொத்து

2 mins read
a453e437-917e-424e-bb19-02c23bf00716
-

பிரேமலதாவின் கடப்பிதழை ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் கடப்பிதழை அவரிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, புதிய கடப்பிதழ் பெறும்போது தம்மீது தொடுக்கப்பட்ட குற்ற வழக்கு தொடர்பான விவரத்தை மறைத்ததாக எழுந்த புகாரின்பேரில் பிரேமலதா தமது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என மண்டலக் கடப்பிதழ் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதனால் பிரேமலதா தம்அது கடப்பிதழை ஒப்படைத்ததை அடுத்து, தம் கணவர் விஜயகாந்துடன் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை. கடப்பிதழ் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா உயர் நீதிமன்றத்தில் தொடுத்த அவசர வழக்கை விசாரித்த நீதிபதி, மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தார். மருத்துவப் பரிசோதனைக்காக விஜயகாந்த் துபாய் சென்றுள்ளார். இதையடுத்து, பிரேமலதாவும் அங்கு செல்ல இருப்பதாகத் தெரிகிறது.

பெற்ற குழந்தையைச் சித்திரவதை செய்த துளசியின் கள்ளக்காதலனும் கைது

விழுப்புரம்: பெற்ற குழந்தை என்றும் பாராமல் அடித்து உதைத்து சித்திரவதை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரும் போலிசில் சிக்கியுள்ளான். இரண்டு வயதேயான தனது பச்சிளம் குழந்தையைத் துளசி கொடூரமாக அடித்து துன்புறுத்தும் காணொளிப் பதிவுகள் அண்மையில் சமூக வலைத்தளங்கள் வழி பரவியதை அடுத்து, அவர் கைதானார். இதுகுறித்து அவரின் கணவர் போலிசில் புகார் அளித்திருந்தார். தன் கள்ளக்காதலன் பிரேம்குமார் சொன்னதால்தான் தான் குழந்தையைத் துன்புறுத்தியதாக துளசி போலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அறந்தாங்கியில் தங்கியிருந்த பிரேம்குமார் கைதானான்.

இந்தியாவுடனான வர்த்தக உறவு மேலும் வளர அமெரிக்க துணைத்தூதர் விருப்பம்

கோவை: கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜுடித் ரேவின் கூறியுள்ளார். மேலும் உலகளவில் இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிச் சந்தையாகவும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான முக்கிய ஆதாரமாகவும் அமெரிக்கா உள்ளது என்று கோவையில் தொழில்துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்வில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "இருதரப்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்க வேண்டும். கோவையில் உள்ள தொழில் சமூகத்தினருடன் நட்புறவு கொள்ளவும் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். அதற்காகவே கோவை வந்துள்ளோம்,'' என்று துணைத் தூதர் ஜுடித் ரேவின் தெரிவித்தார்.

தாலிக்குத் தங்கம்: 334,000 பேர் காத்திருப்பு

சென்னை: 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தின்கீழ் தங்கம் பெறுவதற்காக 3.34 லட்சம் பேர் காத்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும் அதனால் ஏழைத் தாய்மார்கள் பலர் கடனாளியாகிவிட்டனர் என்றும் சட்டப்பேரவையில் அவர் குறிப்பிட்டார்.