தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்றும் போடாதவர்களுக்கு மதுபானம் விற்கப்பட மாட்டாது என்றும் இம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். இம்மாவட்ட மக்களில் 97% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் மேலும் கூறியுள்ளார்.
அமைச்சரை பாராட்டிய பாஜக உறுப்பினர் சரஸ்வதி
சென்னை: தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி பேசும்போது, ''மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை சுகாதாரத் துறை. அந்தச் சேவையை அமைச்சர் மா.சு. போல வேறு யாராலும் செய்யமுடியாது,'' என்று பாராட்டியுள்ளார்.
ஆண்களுக்கும் ரயிலில் சலுகை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் அலுவலக நேரங்களில் ஆண் பயணிகளுக்கு இருந்த நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் இரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்த பிறகே கட்டணச் சீட்டு வழங்கப்படும். திரும்பி வருவதற்கான கட்டணச் சீட்டு, சீசன் டிக்கெட்டுகளையும் வாங்கி பயணம் செய்யலாம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மின்சார ரயிலில் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூன்று மாணவிகளுக்குப் பாதிப்பு
நாமக்கல்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாள்களே ஆன நிலையில், மூன்று மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும் அரியலூரில் படிக்கும் 9ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

