அறப்பணி, திருப்பணிக்குத் தங்கக்கட்டி வருவாய் திட்டம்

அறப்பணி, திருப்பணிக்குத் தங்கக்கட்டி வருவாய் திட்டம்

2 mins read
b696cd85-86ea-4f9d-aa45-e7968feb67be
பிரபலமான திருச்செந்தூர் முருகன் கோயில். பக்தர்கள் வழங்கும் நகைகள் தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு கிடைக்கும் வருவாய் அறப்பணிக்கும் திருப்பணிக்கும் பயன்படுத்தப்படும். கோப்புப்படம் -

தமிழக கோயில் காணிக்கை நகைகளை பாளமாக்கி வங்கியில் இருப்பு வைக்க உத்தரவு

சென்னை: தமிழ்­நாட்­டில் அர­சாங்­கம் நிர்­வ­கித்து வரும் இந்து கோயில்­களில் திருப்­ப­ணி­க­ளுக்­கும் வளர்ச்சித் திட்­டங்­க­ளுக்­கும் நிதி திரட்ட தமி­ழக அரசு புதிய ஒரு திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

அரசு கோயில்­களில் பக்­தர்­கள் வழங்­கும் சிறுசிறு நகை­களைத் தங்­கக்கட்டி­க­ளாக உருக்கி அவற்றை வங்கி­களில் இருப்பு வைத்து வட்டி­ பெற்று அந்த நிதியை ஆலயத் திருப்­ப­ணி­களுக்­கும் அறப்­ப­ணி­களுக்­கும் செல­விடும்படி அர­சாங்­கம் உத்தரவிட்டுள்ளதாக இந்து அற­நி­லை­யத் துறை அமைச்­சர் சேகர் பாபு அறி­வித்­துள்­ளார்.

பக்­தர்­கள், கடந்த 10 ஆண்டு­களில் வழங்­கிய நகை­கள் எல்­லாம் கோயில் பெட்­ட­கங்­களில் அப்­ப­டியே இருப்­ப­தா­க­வும் அவை மும்­பை­யில் உள்ள அர­சுக்­குச் சொந்­த­மான சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு அனுப்­பப்­பட்டு தங்­கக் கட்­டி­க­ளாக உருக்கி சேர்க்­கப்­படும் என்­றும் சட்­ட­மன்றத்தில் சனிக்கிழமை பேசிய அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உருக்­கப்­பட்ட தங்­கக் கட்­டி­கள், விலை­ம­திப்பு மிக்க ரத்­தி­னங்­கள், கற்­கள் எல்­லாம் வங்­கி­களில் இருப்பு வைக்­கப்­படும். இந்­தத் திட்­டத்தை மேற்­பார்­வை­யி­டு­வ­தற்­காக மண்­டல அள­வி­லான மூன்று குழுக்­கள் அமைக்­கப்­படும் என்­றும் அவற்­றுக்கு ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் தலைமை வகிப்­பார்­கள் என்­றும் தெரி­வித்த அமைச்­சர், இந்­தச் செயல்­திட்­டத்­திற்­கான நட­வடிக்­கை­கள் அடுத்த சில வாரங்­களில் தொடங்­கும் என்­றார்.

பெட்­ட­கங்­களில் இருக்­கும் நகை­க­ளைச் சரி­பார்க்­கும் பணி­கள் அனைத்­தும் ஆல­யங்­க­ளி­லும் அற­நி­லை­யத் துறை இணை­யத் தளங்­களி­லும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

திருத்­தணி, பழனி, சம­ய­பு­ரம், திருச்­செந்­தூர் போன்ற பெரிய கோயில்­களில் உள்ள தங்க நகை­கள் முத­லில் சரி­பார்க்­கப்­ப­டும் என்­ற அவர், தெய்­வங்­களை அலங்­க­ரிக்கும் பெரிய அள­வி­லான தங்க நகை­கள் ஆல­யங்­களி­லேயே வழி­பாட்­டிற்­காக வைக்­கப்­படும் என்றும் கூறி­னார்.

தங்­கக்கட்­டி­கள் மூலம் கிடைக்­கும் வரு­வாய், கோயில் தேர்­க­ளைத் தயா­ரிக்­க­வும் பயன்­ப­டுத்­தப்­படும் என்று மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­க­வும் டைம்ஸ் ஆஃப் இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, இந்­தச் செயல்­திட்­டம் பற்றி கருத்­து­ரைத்த மூத்த அதி­கா­ரி­கள், தங்­கக் கட்­டி­க­ளாக மாற்­றப்­ப­டக்­கூ­டிய சுமார் 2,000 கிலோ தங்க நகை­கள் இப்­போது கைவ­சம் இருப்­ப­தா­கக் கூறினர்.

இத்­த­கைய செயல்­திட்­டம் 1978 முதல் 2010 வரை நடப்­பில் இருந்­த­தா­க­வும் ஆனால் 2011ல் ஆட்சிப் பொறுப்­பேற்ற அதி­முக அர­சாங்­கம் அதை நிறுத்­தி­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரிவித்தனர்.