மதுரை: ஒரு தையல்காரரிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தைப் பறித்த போலிஸ் துணை அதிகாரி வசந்தியால் காவல்துறைக்கே பெரும் களங்கம் விளைந்துள்ளதாக ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32. தையல்காரரான இவர், தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.10 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளார்.
அர்ஷத்தின் நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துகொண்ட மதுரை, நாகமலை புதுக்கோட்டை போலிஸ் அதிகாரி வசந்தி, போலிஸ் வாக னத்தில் வந்து இறங்கியுள்ளார்.
அர்ஷத்தைப் பிடித்து மிரட்டி பணத்தைப் பறித்துக்கொண்டு அவரைத் துரத்தி அடித்துள்ளார்.
தனது பணத்தை அர்ஷத் திருப் பிக் கேட்டதற்கு, "கஞ்சா வழக்கு போட்டு கைது செய்துவிடுவேன்," எனவும் வசந்தி மிரட்டி உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவம் குறித்து அர்ஷத், மதுரை மாவட்ட போலிஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து வசந்தி கைதானார்.
இவ்வழக்கு விசாரணையின்போது, வசந்தியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை மீட்டுக்கொள்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி புகழேந்தி, "நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய காவலர்களே குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்தவேண்டும்," என அறிவுறுத்தினார்.

