முதல்வர்: மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்துக்கு தொல்லியல் குழு செல்லும்
சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும் அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் நேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பறைசாற்ற இனி உலகெங்கும் பயணம் செய்வோம் என்றார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர்.
"சங்ககால துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரளவில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும் பண்பாட்டினையும் அறிந்து கொள்ளும் வகையில், அம்மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும்.
"ஆந்திராவில் உள்ள வேங்கி, கர்நாடகாவில் தலைக்காடு, ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம், பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு வணிகத் தொடர்புகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதை உறுதி செய்யும் வகையில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
"மாமன்னன் இராசேந்திர சோழன் வெற்றித்தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டு தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
"மேலும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே நமது அரசின் தலையாயக் கடமை," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசும் போது குறிப்பிட்டார்.
கிபி 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
திருப்பரங்குன்றம் அருகே கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு, சிற்பம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் இது தொடர்பாக சில தகவல்களைச் சேகரித்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் சிலர் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்று, அப்பகுதியின் மேற்பரப்பை கள ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கிரந்தம் கல்வெட்டும் படைப்பு சிற்பமும் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது.