'இந்திய மக்கள் தொகையில் 50% பேருக்கு ஆங்கிலமும் இந்தியும் தெரியாது'
சென்னை: உள்நாட்டு விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோந்த பி.ராம்குமாா் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், விமானத்தில் செல்லும் பயணிகள் அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன குறித்த அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"விமானத்தில் இருந்து வேகமாக வெளியேறி தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, உயிர்வாயு குறைபாட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதற்குரிய முகக்கவசத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இருக்கைப்பட்டை அணியும் முறை ஆகியவை குறித்து அனைத்து விமானங்களிலும் அறிவிக்கப்படும்.
"மேலும், விமானம் நீா்நிலைகளில் விழும் பட்சத்தில் பயணிகள் அணிய தனி ஆடைகள் விமானத்திலேயே உள்ளன. அவற்றை அணியும் முறை குறித்தும் செயல்முறை விளக்கங்களை விமானக் குழுவினர் அளிப்பார்கள். ஆனால் இவற்றை மாநில மொழிகளில் அறிவிப்பதில்லை," என்கிறார் ராம்குமார்.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 50 விழுக்காட்டினருக்கு ஆங்கிலமும் இந்தியும் தெரியாது என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்திய ரயில்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மாநில மொழிகளிலும் அறிவிப்புகள் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதேபோன்று உள்நாட்டு விமானங்களிலும் மாநில மொழிகளில் அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
"விமானம் புறப்படும், பின்னர் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிடுவதுதான் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்," என்கிறார் ராம்குமார்.
விமானத்தில் வழங்கப்படும் விளக்கக் கையேடுகளும் மாநில மொழிகளில் அச்சிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ள நிலையில், அவரது மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு நாளை விசாரிக்க உள்ளது.

