சென்னை: இருநூறு கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி போலிசார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை விடிய விடிய நீடித்தது என்றும் சென்னை அருகே அவர் வாங்கிய சொகுசு வீடு உட்பட பல்வேறு சொத்துகள் எப்படி வந்தன என்பது குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் போலிசாருக்கு கிடைத்துள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதாக டிடிவி.தினகரனிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பிறகே சுகேஷ் குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீடு, சொகுசு கார்கள் வாங்கிக்கொடுத்த கமலேஷ், அருண் முத்து, மோகன்ராஜ், நடிகை லீனா மரியம்பாலின் மேலாளர் சாமுவேல் ஆகிய நால்வரிடம் நேற்று முன்தினம் டெல்லி போலிசார் விசாரணை நடத்தினர்.
பல தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் அவர்களுக்குத் தேவையான திரைமறைவு வேலைகளைச் செய்து கொடுப்பதாக உறுதி அளித்து பல கோடிகளை சுருட்டி உள்ளார் சுகேஷ். இவரது காதலி லீனா இவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
மோசடி மூலம் கிடைத்த பெருந்தொகையை வைத்து சொகுசு வீடு, 16 சொகுசு கார்கள் என்று சுகேஷ் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இது குறித்த முக்கிய தகவல்களை அவரது கூட்டாளிகள் அண்மைய விசாரணையின்போது தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நீடிக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக மேலும் சிலர் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.

