சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு மெல்ல அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் புதிதாக 1,631 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 1,523 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் ஆகும்.
தினமும் ஆயிரக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் 158,197 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,304ஆக உயர்ந்துள்ளது.
கோவையில்தான் தினமும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் அங்கு 235 பேருக்கும் சென்னையில் 174 பேருக்கும் செங்கல்பட்டில் 135 பேருக்கும் புதிதாக கிருமி தொற்றி உள்ளது.
இதையடுத்து கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. அங்கு பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் அதன் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
கேரளாவிலும் தொற்றுப்பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கிருந்து கோவைக்கு வருவோர் கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், திரையரங்குகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கைகள் நிரப்பப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
தற்போது மாநிலம் முழுவதும் 16,304 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 69 அரசு ஆய்வகங்கள் மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றன.
சென்னையைத் தவிர 37 மாவட்டங்களில் 1,456 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

