சென்னை: தமிழக அரசு அடுத்தடுத்து அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் அறிவிப்போடு நின்றுவிடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை தாம் மாதந்தோறும் கண்காணிக்கப் போவதாக அவர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசம்போது குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செப்டம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்தும் துரித கதியில் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
"அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு திட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவேன்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைத்துத் துறைகளையும் முந்திக்கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர், சில திட்டங்களை ஒரே வாரத்தில் அமைச்சர் சேகர்பாபு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்ததாகப் பாராடினார்.
அறநிலையத் துறை சார்பில் அமைச்சர் சேகர் பாபு பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் அவரை 'செயல் பாபு' எனக் குறிப்பிடலாம் என முதல்வர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

