தி.மலை: உணவகத்தில் உணவருந்திய பத்து வயது சிறுமி உட்பட 25 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாள்.
ஆரணியைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளியான ஆனந்த், தனது மனைவி, பத்து வயது மகளான லோஷினி, நான்கு வயது மகன் சரண் ஆகியோருடன் கடந்த 8ஆம் தேதி அசைவ உணவகம் சென்றுள்ளார்.
உணவருந்திய பின் வீடு திரும்பிய நால்வருக்கும் உபாதைகள் ஏற்பட, மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றனர். சிகிச்சைக்குப்பின் மற்ற மூவரும் உடல்நலம் தேறிய நிலையில், சிறுமி லோஷினிக்கு மட்டும் பாதிப்பு அதிகமானது.
ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், லோஷினி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதே உணவகத்தில் உணவருந்திய பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்குறிப்பிட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். பின்னர் உணவகத்துக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

