நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் சொந்த உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குவதாகவும் மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என்றும் திரு ஸ்டாலின் கூறினார். மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும்" என்று ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், கூலித்தொழிலாளியான சிவகுமார் - ரேவதி தம்பதியின் மகன்.
மருத்துவராக வேண்டும் என்ற வேட்கையுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில், இரவு 1 மணி வரை தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், இரவு 1 மணிக்கு மேல் வீட்டில் தூக்கிட்டு சொந்த உயிரை மாய்த்துக்கொண்டார்.

