சென்னை: திமுகவின் ஆட்சி நடப்புக்கு வருமேயானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வருமான பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்குத் தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக் குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?
"ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் 19 வயது மாணவர் தனுஷின் உயி ரைக் காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விட்டுள்ள சேலம் மாணவர் தனுஷ் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா இன்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும்," என அறிவித்துள்ளார்.

