கூடலூர்: பெண் விவசாயி ஒருவர் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடன் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதியே, பெண்ணின் நிலையை உணர்ந்து அவரது கடனை அடைத்திருப்பது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள தர்மகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீனா, 50. விவசாயி. கணவரை இழந்த இவர், வங்கியில் ரூ.50,000 விவசாயக் கடன் வாங்கினார். இவருக்கு அவரது ேதாழி சுமா, 50, பிணை கையெழுத்துப் போட்டிருந்தார்.
சில தவணை மட்டுமே பணத்தை திருப்பிக் கட்டிய நிலையில், ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரால் வேலைக்குச் செல்லவோ, கடனைத் திருப்பி அடைக்கவோ முடியவில்லை.
இந்நிலையில், கூடலூர் சார்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒரே தவணையாக ரூ.20,000 செலுத்தினால் கடனில் இருந்து விடுவிப்பதாக வங்கி அதிகாரி கூறினார்.
அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று பெண்கள் கூறினர். அது உண்மைதான் என்பதை நீதிபதி வெங்கட சுப்பிரமணி விசாரித்து தெரிந்துகொண்டார்.
மீண்டும் நீதிபதி வங்கி நிர்வாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.10,000 செலுத்தினால் போதும் என்று முடிவானது. கடனை நீதிபதியும் வழக்கறிஞர்களும் சேர்ந்து செலுத்தி ரீனா, சுமாவை வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர்.

