ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை: ரூ.1.33 கோடி மதிப்பிலான 3,125 கிராம் தங்கத்தை மின்சார கம்பிக்குள் மறைத்து கடத்தி வந்த இருவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் அதிகாலை 2:30 மணிக்குத் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்த 34 வயது ஆடவரின் உடைமைகளையும் அதிகாலை 4 மணிக்கு வந்த 35 வயது ஆடவரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதித்தபோது அவர்களின் பெட்டிகளின் உள்ளே 3,125 கிராம் எடையில் 11 தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு பயணிகளிடமும் விசாரணை தொடர்கிறது. படம்: ஊடகம்
சென்னை திரும்பினார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி துபாய் சென்றிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, இளைய மகன் சண்முகபாண்டியனும் துபாயிலிருந்து வரும் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் சென்னைக்குத் திரும்பினர்.
திருமணப் பரிசாக மண் அடுப்பு
சென்னை: ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.900க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எரிவாயு உருளை விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் சக தாதிகள் மணமக்களுக்கு திருமணப் பரிசாக மண் அடுப்பை வழங்கினர். சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் அதுல்யாவுக்கும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமக்களுக்கு சக தாதிகள் மண் அடுப்பை பரிசாகத் தந்தனர். படம்: ஊடகம்
பரோட்டா சாப்பிட்டவர் உயிரிழப்பு
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், ஒரு முக்கிய வேலை காரணமாக திருக்கோவிலூர் வந்தவர், அந்தப் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து பார்சல் வாங்கி வந்த பரோட்டாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வாயில் வைத்த பரோட்டாவோடு அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

