ஐந்து சவரன் வரையிலான நகைக் கடனைத் தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவு

ஐந்து சவரன் வரையிலான நகைக் கடனைத் தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவு

2 mins read
a1eaaaed-ee32-4eae-b056-e84cc6ba5b75
-

சென்னை: மக்கள் நீண்ட நாள்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நகைக் கடனைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவியதாகக் கூறப்படுகிறது.

"தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரையிலான நகை களை அடமானமாக வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்," என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்தார்.

"உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

"நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் முதல்வர் கூறினார். இந்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ.6,000 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்த லில், திமுக அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இந்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இருந்தது.

மக்களுக்கு உடனடி நிவாரணம் தரும் விஷயம் என்பதால், இது குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் விரைவில் ஒன்பது மாவட்டங்களின் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக நகைக்கடன் தள்ளுபடி பற்றி இந்தத் தருணத்தில் அறிவிப்பது தேர்தலின்போது அக்கட்சிக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என ஏற்கெனவே அதிமுக வட்டாரங்கள் கூறி வந்த தும் குறிப்பிடத்தக்கது.