கண்டெடுத்த ரூ.50,000 பணத்தை ஒப்படைத்த துப்புரவாளர்

கண்டெடுத்த ரூ.50,000 பணத்தை ஒப்படைத்த துப்புரவாளர்

1 mins read
839f231d-78f0-4e33-9c7b-11ed4fdd332c
பழனியம்மாள். படம்: ஊடகம் -

சென்னை: ­ஏழ்மை நிலையிலும் நேர்மை தவறாமல் சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை எடுத்து தொலைத்தவரிடம் ஒப்படைத்த துப்புரவுத் தொழிலாளி பழனியம்மாளை மக்கள் பலரும் மனம் நெகிழ்ந்து பாராட்டி வரு கின்றனர்.

சில பெண்கள் பழனியம்மாளை முத்தமிட்டுப் பாராட்டினர். சிலர் சால்வை போர்த்திப் பாராட்டினர்.

இதுகுறித்து பழனியம்மாள் கூறும்போது, "பணப்பையுடன் ரூ. 50,000 பணத்தைத் தொலைத்தவர், அந்தப் பணப்பையில் என்னென்ன வைத்திருந்தார் என்பதை சரியாகக் கூறியதால், அவர் சரியான நபர் தான் என்பதை அறிந்து அவரிடம் பணப்பையை ஒப்படைத்தேன். எல்லாரும் என்னைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. பணத்தை ஒப்படைத்ததால் நானும் மன நிம்மதியுடன் உள்ளேன்," என்று பழனியம்மாள் கூறியுள்ளார்.

உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் கணவர், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குப் போதிய பணமின்றித் தடுமாறும் சூழலில் குடும்பத்தை நடத்தி வரும் பழனியம்மாள், அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமல் தெருவில் கிடந்த ரூ.50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

சென்னை, அடையாறில் பழனியம்மாள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சாலையோரம் கறுப்பு நிற பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதில் ரூ.50,000 பணம் இருந்துள்ளது.

இதையடுத்து, அங்கேயே காத்திருந்த பழனியம்மாள், சிறிது நேரத்தில் பணப்பையைத் தேடி வந்த உரிமையாளரிடம் அடையாளத்தை சரிபார்த்த பின் ஒப்படைத்துள்ளார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், அங்குள்ள அனைவரும் பழனியம்மாளைப் பாராட்டியுள்ளனர். தனது குடும்ப கஷ்டத்திலும் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து உன்னதப் பெண்ணாகியுள்ளார் பழனியம்மாள்.