செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b5baf6bd-2e73-4a14-9c24-114fde8860dc
-

ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசிப்பதால் மக்கள் மத்தியில் பீதி

நீலகிரி: கேரளாவில் வெளவால்களால் நிஃபா கிருமித்தொற்று பரவியதாக செய்திகள் வெளிவந்த நிலையில், நீலகிரி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் உள்ள எருமாடு பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் கூட்டம் கூட்டமாக வசிப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள யூகலிப்டஸ் மரங்களை வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்த வெளவால்கள், இரவு நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் திரிந்துவிட்டு காலையில் மீண்டும் அதே மரங்களுக்குத் திரும்புகின்றன.

'ஒரு ரூபாய் கூட அதிகம் கூடாது'

சென்னை: 'டாஸ்மாக்' மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலையை ஒரு ரூபாய் உயர்த்தி விற்றாலும் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். "ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலைப் பட்டியல் வைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் மதுக்கடைகள் செயல்படக் கூடாது. பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இந்தக் கடைகள் செயல்படுவது தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய கைதி பிடிபட்டார்

காஞ்சிபுரம்: நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்ற கைதிக்கு அடிதடி, பைக் பந்தயம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவரை ஒரு வழக்கு தொடர்பில் முன்னிலைப்படுத்த காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு போலிசார் அழைத்து வந்தனர்.

அப்போது, பத்மநாபன் போலிசாரை ஏமாற்றிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடி உள்ளார். இந்தக் கைதியைப் பிடிக்கமுடியாமல் தடுமாறிய போலிசார், அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தினர். இதனையடுத்து, 2 மணி நேரத்திற்குள் பிடிபட்ட பத்மநாபனிடம் போலிசார் விசாரணை செய்தனர்.

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு

சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியவர், கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் பேரறிவாளன்

சென்னை: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பேரறிவாளன் சிறுநீரகக் கோளாறு, வயிற்று வலி உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.