சென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் 'நீட்' தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கி இருப்பதாகவும், நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு அதிபரின் ஒப்புதலைப் பெற்று, 'நீட்' தேர்வை முழுமையாக நீக்கும் வரை சட்டப் போராட்டம் நீடிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
'நீட்' தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை ஆள் மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் 'நீட்' தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.
"மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன்.
"உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் 'நீட்' தேர்வை விரட்டுவோம்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் 'நீட்' தேர்வு எழுதிய தமிழக மாணவி ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, மாணவர்கள் இவ்வாறான முடிவை எடுத்ததற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக மாலைமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை முன்வைத்து திமுக அரசு, அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று அண்ணாமலை மேலும் சாடி உள்ளார்.