தோப்புக்கரணம் போடுவதில் சாதனை
ஈரோடு: சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரின் மகன்களான எட்டாம் வகுப்பு படிக்கும் சுபாஷ், 11ஆம் வகுப்பு படிக்கும் பரத் ஆகிய இருவரும் தோப்புக்கரணம் போடுவதில் தேசிய சாதனை புரிந்துள்ளனர். சுபாஷ் ஒரு நிமிடத்தில் நூறு, பரத் நாற்காலி மேல் நின்றபடி 93 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை படைத்துள்ளனர். இவர்களின் சாதனையை 'அப்துல்கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.
கோடநாடு கொலை: ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கைபேசி உரையாடல்கள்
மதுரை: ஜெயலலிதாவின் கோடநாடு வீட்டில் நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைபேசி உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பத்து பேர் கைதாகி உள்ளனர். கொலை நிகழ்ந்த அன்று சந்தேக நபர்கள் சென்ற வாகனத்தை சோதனைச்சாவடியில் போலிசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது சிலர் தொடர்புகொண்டு அவர்களை விடுவிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைபேசிக்கு வந்த அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வு முடிவுகள் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் எட்டு பேருக்கு தொற்று பாதிப்பு
திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்படும் நிலையில், திருப்பூர் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எட்டு பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பள்ளியில் படிக்கும் 220 மாணவர்கள், 11 ஆசிரியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பாதிப்பு குறித்து தெரிய வந்தது. இதே போல் ஈரோட்டில் உள்ள பள்ளியில் மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் தமிழகத்தில் 1,591 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். மதுரையில் திங்கட்கிழமை புதிதாக 19 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 559ல் இருந்து 531ஆக குறைந்துள்ளது.
வாகனங்களின் வேகத்தைக் குறைக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்து
சென்னை: நாடு முழுவதும் வாகனங்களை நூறு கிலோமீட்டர் வேகத்துக்குள் இயக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த போதே நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். தற்போது நாடு முழுவதும் விரைவுச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளில் நூறு கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதி வேக வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர்ப்பலி எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், முந்தைய அறிவிப்பாணையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

