சென்னை: தமிழத்தைச் சேர்ந்த தாதியர் மூவருக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் 'ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
தாதியரின் நீண்டகாலச் சேவை, முகம் சுளிக்காத கவனிப்பு, அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறந்த முறையில் பணியாற்றும் தாதியரைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 'ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டுக்கான விருது தமிழகத்தின் மூன்று பேர் உள்பட 51 தாதி யருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஓ.வி.உஷா, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தாதி ஜி.மணிமேகலை, விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய தாதி எஸ்.வேளாங்கன்னி ஆகிய மூவருக்கும் காணொளி வழி நடைபெற்ற விழாவில் அதிபர் விருதை வழங்கினார்.
'கை விளக்கேந்திய காரிகை' என்று உலக மக்களால் போற்றப்படும் 'ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்' அம்மையார், தாதியர் சேவையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கடந்த 32 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்துள்ளேன். இதுவரை ஒரு இறப்புகூட நேர்ந்ததில்லை. 'ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்' அம்மையார் பெயரில்
விருது பெறுவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. இதுவே எனது வாழ்நாள் சாதனை.
தாதி ஓ.வி. உஷா

