சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தும் அதிமுகவில் இருந்து விலகி தனித்துப் போட்டி யிடப் போவதாக பாமகவும் ஏற்கெனவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப்போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் இரு தினங்களில் உறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மக்களையும் உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து களமிறங்குவதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

