மூன்று கோவில்களில் மூவேளையும் அன்னதானம் தொடங்கியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழி நேற்று தொடங்கி வைத்தார். இம்மூன்று கோயில்களிலும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளையும் சாம்பார், ரசம், இரண்டு வகையான கூட்டுடன் உணவு வழங்கப்படும் என்றும் இதன்மூலம் நாளொன்றுக்கு 7,500 பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேச நாட்களில் உணவுடன் சேர்த்து அப்பளம், பாயசமும் வழங்கப்பட உள்ளது.
அகழாய்வில் மேலும் மூன்று உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை: கீழடி அருகே அகரத்தில் நடந்த அகழாய்வின்போது மேலும் மூன்று உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு கொண்ட உறை கிணறு ஒன்றும் இரண்டடுக்கு கொண்ட இரு உறை கிணறுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நான்கு உறை கிணறுகள் தொல்லியல் துறையினரின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்
சுதாகரனின் சொத்துகள் முடக்கம்
தஞ்சாவூர்: பினாமி சட்டத்தின்கீழ் வருமானவரித் துறை அதிகாரிகள் சசிகலாவின் அக்கா மகன் வி.என்.சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகளை முடக்கி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சசிகலாவுக்குச் சொந்தமான பங்களாவை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 8ஆம் ேததி முடக்கி நடவடிக்கை எடுத்தனர். தற்போது சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள சுதாகரனுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலம் பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சசிகலா, இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான சொத்துகள் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

