அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு
சென்னை: அரசுப் பணிகளில் நேரடியாக சேர்வதற்கான வயது உச்சவரம்பு 30ல் இருந்து 32 வயதாக உயர்த்தப்படுவதாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளைக் கூட்டி 32 வயது ஆக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பெரியாரின் 143வது பிறந்தநாளில்
அவரது சிலைக்கு மலர் தூவி, மரியாதை
சென்னை: பெரியாரின் 143வது பிறந்தநாள் சமூகநீதி நாளாக தமிழக அரசின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.
இன்று பதவியேற்கும் புதிய ஆளுநர்
சென்னை: தமிழகத்தின் 15வது புதிய ஆளுநராக இன்று 18ஆம் தேதி பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில், நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. ஆர்.என்.ரவிக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
23 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 23 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பில் கணித ஆசிரியரை போலிசார் கைது செய்தனர். அதே பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் சேகர், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, ஆசிரியர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் கைது செய்தனர்.
ரூ.3.08 கோடி தங்கம் பறிமுதல்
கோவை: ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருள்களை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பயணிகளை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

