திருமண மண்டபத்தில் வெடித்தது மின்சாரப்பெட்டி: மணமகள் மயக்கம்
சென்னை: திருமண வரவேற்பு நிகழ்வின்போது மண்டபத்தில் இருந்த மின்சாரப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியதில் மணமகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். சென்னை வியாசர்பாடி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்கசிவால் இவ்வாறு நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், மின்சார வாரியத்தில் புகார் அளித்து இரண்டு மணிநேரம் ஆகியும் மின் இணைப்பு சரிசெய்யப்படவில்லை. அதனால் கோபமடைந்த மணமக்களின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணமகனின் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மேலும் மணமகளும் மயங்கி விழவே, திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டது.
காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு
சென்னை: காவல் நிலைய பெயர்ப்பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனியார் பெயர்கள் இடம்பெறுவது மக்கள் மத்தியில் காவல்துறை மீது தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, விளம்பரத்துடன் கூடிய காவல் நிலைய பெயர்ப் பலகைகளை அகற்றுமாறு அவர் கூறியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ்: அண்ணாமலைக்கு வெங்கடேசன் எம்பி கேள்வி
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது. அண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், புதிய மருத்துவமனைக்கான பணிகளைத் தொடங்க தாமதமாகும் நிலையில், 150 மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற ஏற்பாடு செய்யலாம் என்றும் அதற்கு தற்காலிக இடத்தை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனினும், தமிழக அரசு இதை ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள வெங்கடேசன், ஐம்பது மாணவர்கள் என்று மட்டுமே மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார். "ஆனால், அண்ணாமலை 150 பேருக்கு என்று பொய் சொல்கிறார். அந்த ஐம்பது பேருக்கு தற்காலிக இடத்தை ஒதுக்கி, இதர வசதிகளையும் ஏற்பாடு செய்ய ஒரு கல்லூரியை முழுமையாக கட்டி முடிப்பதற்கான செலவாகும். இதற்கான செலவை மத்திய அரசு ஏற்குமா," என்று வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். இதன் மூலம் உயிரை மாய்த்துக்கொள்வோர் எண் ணிக்கை குறைய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.

