சென்னை: விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதையுமே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என அறிக்கை ஒன்றில் அவர் சாடி உள்ளார்.
"விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக விவசாய சங்கங்களையோ, விவசாயிகளையோ, எதிர்க்கட்சித் தலைவர்களையோ மத்திய அரசு அழைத்து ஆலோசிக்கவில்லை.
"கடந்த பத்து மாதங்களாகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசுவதற்கும் பிரதமர் மோடி தயாராக இல்லை," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது பிரதமர் மோடி எந்த அளவுக்குக் கடுமையான மனநிலையோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மூன்று வேளாண் சட்டங்களும் பெரு நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான் கொண்டு வரப்பட்டன என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாடியுள்ளார்.
"நெஞ்சுறுதியோடு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக விவசாயிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது," என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

