'கொரோனா தொற்று நெருக்கடியை தமிழக அரசு திறமையாகக் கையாண்டுள்ளது'
சென்னை: தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு தம்மால் இயன்ற அளவு உழைக்கப் போவதாகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு சேவையாற்றப் போவதாகவும் தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நேற்று ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், தமது செயல்பாடுகள் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்றார்.
உலகின் தொன்மையான நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தமிழில் பேச கற்று வருவதாகவும் புதிய ஆளுநர் கூறினார்.
நேற்று பதவியேற்றுக் கொண்ட கையோடு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் ஆளுநர் ரவி. பொதுவாக ஆளுநர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது மரபு அல்ல. ஆனால் முதல் நாளே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ஆளுநர் ரவி.
அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தாம் பதவியேற்று சில நிமிடங்கள்தான் ஆகின்றன என்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இப்போது ஏதும் தெரிவிக்க இயலாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க கால அவகாசம் தேவைப்படும் என்றார்.
அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் தமக்கு இருப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உள்பட்டும் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தமது பங்களிப்பை தர இருப்பதாகவும் புதிய ஆளுநர் கூறினார்.
"கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதில் திறம்பட செயல்பட்டுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி உள்ளது," என்று பாராட்டினார் ஆளுநர் ரவி.
முன்னதாக நேற்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

