சென்னை: தென்னிந்தியாவின் பிரபல நடிகரான விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' ரகசியக் கூட்டம் நடத்தி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.
ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6, 9 தேதிகளில் இரு கட்டங் களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது.
இதன் தொடர்பில் விஜய் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடலாமா, வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய சனிக்கிழமை அன்று நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் ரகசிய மாக நடந்தது.
இந்தக் கூட்டத்துக்கு விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், "பஞ்சாயத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது," என்றார்.
அதே வேளையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள் கட்சிக் கொடியையும் தனது புகைப்படத்தையும் பயன்படுத்திக்கொள்ள விஜய் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்து அதி காரபூர்வமான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

