தாய், தந்தை உட்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு

தாய், தந்தை உட்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு

2 mins read
63e78b0a-a03e-49d1-b8cf-b152f655811b
படம்: இந்திய ஊடகம் -

தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இம்மாதம் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவுசெய்ய அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக திரு சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தச் செய்தி பரவிய நிலையில், கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரலில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு, ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் ஆறு பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்குத் தொடர்ந்த விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பியளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்