திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது.
குற்றாலம் அருவி சுற்றுலாப் பயணிகளுக்கு திறப்பு
கோவை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த குற்றாலம் அருவியில் நேற்றுமுதல் சுற்றுப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இருமுறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழ் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இணையத்தளத்தில் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அருவியில் நீராட அனுமதி அளிக்கப்படும் எனவும் கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.
22 மொழிகளில் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' மொழிபெயர்ப்பு
சென்னை: கவியரசு வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் தற்போது 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்களை வடிகட்டும் சுடுமண் குழாய், ஒன்பது அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு அடி உயரமுள்ள இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கொள்கலனைத் தொல்லியல் ஆய்வாளர்கள் வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அதன் அடியில் மற்றொரு கொள்கலன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டடுக்கு கொண்ட கொள்கலன், பழங்காலத்தில் தானியப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

