சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நேற்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததைத் தொடர்ந்து, காரும் வெடித்துச் சிதறியது. இதனால், கார் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளும் பலத்த சேதம் அடைந்தன. ஆனால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், காரில் அனுமதி யின்றி வெடி பொருள்களைக் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் என்பவரை சாத்தான்குளம் போலிசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை யைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45. இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக் கரையில் வெடிக் கிடங்கு வைத்துள்ளார். இந்தக் கிடங்கில் திருமணம், திருவிழாக்களுக்குத் தேவையான வெடிபொருள்களைத் தயாரித்துக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக வெடி கடையைத் திறப்பதற்காக கடை உரிமையாளர் ஒருவர் வெடியைக் கொண்டு வந்து தரும்படி கேட்டுள்ளார்.
அதைக்கொண்டு சென்று கொடுப்பதற்காக தனது காரில் ரூ.30,000 மதிப்பிலான வெடிகளுடன் அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் வாசல் அருகே வந்தவர், காரின் கதவை 'ரிமோட்' மூலம் மூடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் வெடித்துச் சுக்கு நூறாகியது. இதில் பாலகிருஷ்ணனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும், அருகாமையில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் உண்டாகி சேதமடைந்தன.
காரில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் கார் சேதம் அடைந்ததுடன் சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன. படம்: ஊடகம்

