சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பா் 15ல் தொடங்கியது. நேற்று (புதன்) காலை வரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு தாக்கல் செய்து உள்ளனா். மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேடப்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பா் 25 ஆகும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தோ்தலிலும் தொடா்கின்றன. காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொமதேக, முஸ்லிம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஒருசில இடங்களில் தொகுதிப் பங்கீட்டில் உரசல் காரணமாக தனித்தனியாக அவை களம் இறங்கி உள்ளன.
உள்ளாட்சி இடங்களுக்கான தொகுதிப் பங்கீடுகளும் மாவட்ட வாரியாக சுமுகமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் தொடா்கின்றன. அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு அவா்க ளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பாமக மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாவட்ட அளவில் அதிமுக - பாமக இடையே மறைமுக கூட்டணி உள்ளதாகக் கருத்து பரவியது. ஆனால், அதை பாமக நிறுவனா் ராமதாஸ் மறுத்துவிட்டாா். பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. இதன் மூலம் உள்ளாட்சித் தோ்தலில் ஏழு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

