புதுக்கோட்டை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு இருக்க வேண்டும். அவருடைய பேச்சுகள் சர்ச்சையாகி வருகிறது.
"மக்கள் போற்றும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் பேச்சுகள் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதிகளை அள்ளிவீசியது. ஆனால் தற்போது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"தேர்தல் நேரத்தில் எல்லா நகைக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியது. தற்போது ஐந்து பவுனுக்கு மேல் நகைக்கடன் வைத்துள்ளவர்களிடம் உடனடியாக கடன்தொகையை வசூல் செய்யவேண்டும் என கூறுவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது," என்றார் வாசன்.

