செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c83d3eb9-197a-4d24-8ded-d77f15e97437
-

கோடநாடு கொலை: மேலும் இருவரிடம் விசாரணை

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ்சாமி, சந்தோஷ்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். பிணையில் உள்ள நிலையில் இருவரும் விசாரணைக்கு வந்துள்ளனர். இவர்களிடம் உதகை பழைய எஸ்.பி. அலுவலக கட்டடத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ் மாணவர் எண்ணிக்கை சரிவு: கமல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கையை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்கலாம் என அறிக்கையில் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து கமல்ஹாசன் தெரிவிக்கையில், "நீட் ஓர் உயிர்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை. கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கி றது. நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 விழுக்காட்டிலிருந்து வெறும் 1.7 விழுக்காடாகச் சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளி விவரமே போதுமானது," என்றார் கமல்.

ரூ.10 கோடி நிலம் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 99 சென்ட் நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர். திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமம் வஞ்சியம்மன் கோயில் அருகில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 99 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நில அளவீட்டில் ஆக்கிரமிப்பு இருந்தது வரு வாய்த் துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலையில் வருவாய்த் துறையினர் தனிநபர் ஆக்கிரமிப் பில் இருந்த 99 சென்ட் நிலத்தை மீட்டு நேற்று கம்பிவேலி அமைத்தனர். மேலும், 'வருவாய்த் துறைக்குச் சொந்தமானது' என்ற அறிவிப்பு பலகையையும் வைத்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடியாகும்.

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகைக்கடன் பெற்றது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது, வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தி கடன் பெற்றது, நகைகளை வாங்காமலேயே நகைகள் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி கடன் கொடுப்பது உள்ளிட்ட வழிகளில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார். தற்போது சேலத்தில் இருக்கும் அவர், இன்று வியாழக்கிழமை காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: ஆந்திராவில் வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு நீங்கியது. இதனால் தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "திங்கட்கிழமை வரை திருப்பதிக்குச் செல்லும் பேருந்து களில் தலா ஐந்து பக்தர்கள் இருப்பர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 30க்கு மேல் அதிகரித்துள்ளது," என்றார்.