மதுரை: யாகத்தில் போடப்பட்ட காசுகள் ஒரு பெண்ணின் உயிருக்கே உலை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த சாலைக்கிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
பொதுவாக, கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட காசுகளை எடுத்துச்சென்று வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இதையடுத்து, மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் துணைத் தலைவி சங்கீதா, யாகம் செய்து சூடாக இருந்த 11 காசுகளை கைப்பையில் போட்டுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நான்குவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மீது தீப்பற்றியுள்ளது. இருசக்கர வாகனத்தில் அவர் தனியாக வந்ததால் தீயை அணைக்கமுடியாமல் போராடியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர்.
இதையடுத்து, 60% தீக்காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா நேற்று காலை உயிரிழந்தார்.
எரிந்துகொண்டிருந்த யாகத்தில் இருந்து சூட்டுடன் காசை எடுத்து கவனக்குறைவாக கைப்பையில் போட்டதே தீவிபத்திற்கு காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

