செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
971aba89-8200-4859-89a0-f0d1dcda699a
-

100 பெண்களை ஏமாற்றியவர் கைது

புனே: திருமணம் செய்துகொள்வதாக இனிக்க இனிக்கப் பேசி நூற்றுக்கும் அதிகமான பெண்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக மகாராஷ்டிரா மாநிலம், புனேயை அடுத்த பிம்ப்ரியில் சென்னை இளைஞர் ஒருவரை போலிசார் கைது செய்தனர். விசாரணையில், திருமண வரன் தேடும் இணையத்தளம் மூலம் 100 பெண்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.

வீடில்லாதோருக்கு நிலம், வீடு

சென்னை: ஊரகப் பகுதிகளில் வாழும் சொந்த வீடு இல்லாதோருக்கும் குடிசை வீடுகளில் வசிப்போருக்கும்

2022ஆம் ஆண்டிற்குள் வீடு கட்டித்தருவதற்கான திட்டத்தை நிறைவேற்ற சிறப்புப் பிரிவு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி, நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கி, குடிசைகளே இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளை எட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

'ரஸ்கு' தொழிற்சாலை மூடப்பட்டது

காரைக்குடி: காரைக்குடியில் சுகாதாரமின்றி 'ரஸ்கு' தயாரித்து, அதை தரையில் கொட்டி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பிய தொழிற்சாலையைப் பூட்டி, முத்திரை வைத்தனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள். வட மாநிலத்தவர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்த 200 கிலோவுக்கும் அதிகமான 'ரஸ்கு'களையும் அதிகாரிகள் குப்பையில் வீசினர்.

இரு கார்கள்; ரூ.1 கோடி கள்ள நோட்டுகள்; 10 பேர் கைது

மதுரை: மதுரை அருகே கள்ளிக்குடி பகுதியில் தனிப்படை போலிசார் நடத்திய வாகனச் சோதனையின்போது இரு கார்களில் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார்களின் இருக்கைகளுக்கு கீழ் வைத்திருந்த நான்கு பைகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றில் சில நோட்டுகள் அசல் பணம் என்பதும் மற்றவை கள்ளநோட்டுகள் என்றும் தெரியவந்ததால் போலிசார் அதிர்ச்சி அடைந்தனர். இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்