மதுரை: தனது தாத்தாவுக்குள் இருந்த தாய்மை உணர்வே அவரை தேசத் தந்தையாக மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா.
"காந்தியைப் போலவே இன்றைய இளைஞர்களும் வாசிப்பு, எழுத்துப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யவேண்டும்," எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியடிகள், 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக மதுரை வந்திருந்தார்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகளின் வறிய கோலத்தைக் கண்டவர், அன்றுமுதல் தானும் மேல்சட்டையைத் துறந்து அரை ஆடைக்கு மாறினார்.
அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றும் இக் கொண்டாட்டம் தொடர்ந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள காந்தியின் பேத்தி தாரா காந்தி, கொள்ளுப் பேரன் வித்தூர் பரதன் ஆகியோர் டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்திருந்தனர்.
தாரா காந்தி பேசியபோது, "விவசாயிகள், ஏழைகளின் துயரத்தை வெளிப்படுத்த காந்தி அரை ஆடைக்கு மாறினார். மதுரை என் தாய் நிலம் என்பதால் இங்கு நான் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணாக உணர்கிறேன்," என்றார்.
"1947ல் விடுதலை பெற்ற இந்தியாவில் இன்றைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அச்சமின்றி வெளியில் சென்று வருவது இயலாத காரியமாக உள்ளது.
"இன்னும் பல்வேறு நீதிக்காகவும் நாம் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளோம்.
"எந்த அரசியல் கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களாட்சியை மட்டுமே நம்புகிறேன்,'' எனக் கூறியுள்ளார்.
என் தாத்தா காந்தியைப் போலவே இன்றைய இளையர்களும் பலவீனமான மனிதர்களிடம் கனிவுடன் பழகவேண்டும்.
பிற மொழி, பிற மனிதர்களை நேசிப்பது போலவே பிற மதங்களையும் நேசிக்க வேண்டும்.
காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா

