சேலம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருப்பவர் வெங்கடாசலம். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு, சென்னை கிண்டியில் உள்ள அவரது அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் முடிவில் எட்டு கிலோ தங்கம், ரூ.13 லட்சத்து 50,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர சந்தன மரத்தாலான 10 கிலோ பொருட்களும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதிமுக ஆட்சி நடந்த சமயத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்ற புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்துள்ளது.
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறு வனங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கியதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சோதனையில் ரூ.13.5 லட்சம் பணம், 8 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை செய்து வருகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடாசலத்தின் வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள், சந்தனத் துண்டுகள் இருந்ததை அடுத்து, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.

