செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ddd797b1-e2e0-4d5c-9853-1486ee932b72
-

பேருந்து-லாரி மோதியதில் மூவர் பலி

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 18 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கோவையில் செங்கற்கள் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த லாரி மோதியதில் அரசுப் பேருந்து உருக்குலைந்து போனது.

விஜய் மக்கள் இயக்கம் வெற்றிமுகம்

சென்னை விஜய் மக்கள் இயக்கத்தினர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், அவர்களில் இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

நெல்லை மாவட்டம், சிறுவனஞ்சி கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ராஜகுமாரியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் திங்களன்று வெளியிடும் என்று கூறப்படுகிறது.

35 நாள்கள் கழித்து மீண்டும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதி 1,702 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வந்த அன்றாடப் பாதிப்பு, இப்போது 35 நாட்களுக்குப் 1,700 பேருக்கும் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,745 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,624 ஆகும். கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,427 பேராக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 226 பேரும் சென்னையில் 222 பேரும் ஈரோட்டில் 116 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

702 குளிர்சாதனப் பேருந்துகள் தயார்

சென்னை: மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அக்டோபர் 1ஆம் தேதி முதல் 702 அரசு குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கொரோனா அதிகரிப்பால் கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்துகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மீண்டும் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு வழங்க உத்தரவு

சென்னை: பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

புலி தாக்கி தொழிலாளி பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே புலி தாக்கியதில் சந்திரன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். தேவன் எஸ்டேட் பகுதியில் அவர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது புலி தாக்கியது. புலி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். T23 என பெயரிடப்பட்டுள்ள அந்தப் புலி இதுவரை இருவரை தாக்கிக் கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.