திருப்பூர்: வெங்காய விலை சரிவு காரணமாக தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள தாகவும் இந்தப் பிரச்சினைக்கு தமிழக அரசு விரைந்து ஓர் உடனடி தீர்வு காணவேண்டும் என்றும் வெங்காய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு வெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தாங்கள் விளைவித்த வெங்காயத்தை அவர்கள் தரையில் கொட்டி நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, "கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால், தங்களது வெங்காய மகசூலுக்கு ஏற்ற விலை கிடைக்கா மல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.8க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயி களுக்கு ரூ.40,000 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
எனவே வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

