செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ec1e601a-00d8-430e-8dc0-b44eb36b8494
-

கல்லுாரி மாணவியை கொலை செய்தவர் சிறையில் அடைப்பு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராமச்சந்திரன். படம்: ஊடகம்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய குடியிருப்புப் பகுதி அருகே இரு தினங்களுக்கு முன்பு குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்வேதா, திருக்குவளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ராமச்சந்திரனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரது உடல்நிலை சீரானதை அடுத்து தாம்பரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அனுபிரியா முன்பு முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இரு நிதி நிறுவனங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னை: சென்னையைச் சேர்ந்த இரு நிதி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது தெரியவந்துள்ளது. இரு நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் பாடலைப் பாடி அறிவுரை

கூறியுள்ள ஜெயக்குமார்

சென்னை: எம்ஜிஆர் படத்தின் பாடலில் உள்ள வரிகள் தற்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

எம்ஜிஆரின் பாடலான 'பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும்' என்ற பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பிடிஆருக்கு மிகவும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கும் வேலை செய்து இருப்பீர்கள். ஆனால் நான் 1991ஆம் ஆண்டிலிருந்து அமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்தைப் படித்து வருகிறேன்," என்று கூறியுள்ள ஜெயக்குமார், டுவிட்டர் உலகிலிருந்து விலகி மக்களைப் பற்றி சிந்தித்து இனிமேலாவது கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

முதல்வர்: 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

சென்னை: மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருவதாகவும் தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.