தேவகோட்டை காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தான் உண்மையான ஜனநாயகத்தின் ஆணிவேர் என்றும் அவர் கூறியுள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த அவர், மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார்.
"உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் தமிழக காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பது இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளுமே தனித்துப் போட்டியிட வேண்டும். கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
"இம்முறை அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றிபெறும் இலக்குடன் காங்கிரசார் செயல்பட வேண்டும்," என அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, தேவகோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, காங்கிரசார் இடையே மோதல் வெடித்தது. அப்போது நாற்காலிகளைத் தூக்கி வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்த மோதல் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் நடைபெற்றது. தன் கண்முன்பே நிர்வாகிகள் இவ்வாறு நடந்து கொண்டதை அடுத்து, அவர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.
தேவகோட்டை கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மூன்றாவது வார்டில் காங்கிரஸ் கட்சி இம்முறை போட்டியிடுகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போதே அக்கட்சி நிர்வாகிகள் இரு அணிகளாகப் பிரி்ந்து மோதிக்கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இவ்வாறு மோதல் நடந்துள்ளது.

