செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9f128135-bc14-4e14-ad2b-c882c41581fe
-

தக்காளியை வீசும் விவசாயிகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் ரூ.4க்கு தக்காளியின் விலை சரிந்துள்ளதால் "அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லையே," என விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இதனால், விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்யாமல் சாலையோரம் கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இரு சிறுநீரகமும் செயலிழந்த சிறுமி; முதல்வர் நேரில் ஆறுதல்

சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜனனி, தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், ராஜநந்தினி தம்பதியின் 14 வயது மகள் ஜனனிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. தாய் ராஜநந்தினி சிறுமிக்கு தனது ஒரு சிறுநீரகத்தைக் கொடுக்க, அதுவும் 15 நாள்களுக்குப் பிறகு செயலிழந்து போனது. இதையடுத்து, பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் தனது உயிைரக் காப்பாற்றும்படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்து சிறுமி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். படம்: ஊடகம்

500 கிலோ மாலை: ஏற்க மறுத்த அமைச்சர்

திருச்சி: விருது வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் கே.என். நேருவுக்கு 500 கிலோ எடையுடன் ஒரு லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருந்த மாபெரும் ரோஜா மாலையை அணிவிக்க இருந்தனர். அதை பாரந்தூக்கியில் தூக்கி நிறுத்தியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர், "முதல்வர் இதுபோன்று செய்யக்கூடாது எனச் சொல்லி உள்ளார். எளிமையாக இருக்கவேண்டும். இதெல்லாம் வேண்டாம்," எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார். இதனால், திமுகவினர் வருத்தமடைந்தனர்.

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு கண்டனம்

விழுப்புரம்: பெண் துணை போலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் "இனிமேலும் விசாரணைக்கு முன்னிலையாகாமல் இருக்கக்கூடாது," என கண்டனம் தெரிவித்துள்ளது.