சென்னை: ஆயிரத்துக்கும் மேலான திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் மறைந்த நடிகர் நாகேஷ். அவருக்கு மரியாதை செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான நாகேஷின் பிறந்தநாள் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் அவருடனான நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.
"மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும் அவரது பெயரில் ஒரு விருதினை வழங்குவதும் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று கமல் ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.