சென்னை: தமிழகத்தில் ஏழு புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், "தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் ஏழு கல்லூரிகளில் 850 மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 1,650 இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளித்துள்ளது.
"ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏழு புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்," என்றார்.

